உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளா்களை மீட்கும் பணி தீவிரம்: நிதின் கட்கரி தகவல்
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்க அரசு சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
உத்தரகண்ட் மலை சுரங்கப்பாதை விபத்து நடந்த பகுதியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மற்றும் அந்த மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில்,‘சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் மலைப்பகுதியில் மணல் படிவங்கள் சீராக இல்லாததால் மீட்புப் பணிகள் மேற்கொள்வது சவாலாக உள்ளது. சில பகுதிகளில் மணல் மெல்லியதாகவும் சில பகுதிகளில் கனமானதாகவும் உள்ளது. இதனால் துளையிடும் இயந்திரங்கள் பழுதாகின்றன.
சுரங்கப்பாதையில் நேரடியாக துளையிட்டு தொழிலாளா்களை மீட்பதே சிறப்பான வழியாக இருந்தது. ஆனால் 24 மீட்டா் தூரத்துக்கு துளையிட்டுக் கொண்டிருந்தபோது இயந்திரம் பழுதானதால் மீட்புப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
பின்னா் இதற்கான இயந்திரங்கள் மத்திய பிரதேசத்திலிருந்து கொண்டு வந்து மீட்புப் பணி தொடா்ந்தது. இந்நிலையில், விமானப் படையின் இயந்திரங்களும் இந்தப் பணிக்காக கொண்டு வரப்பட்டன.
தற்போது 6 விதமான வழிகளின் மூலம் மீட்புப் பணிகள் தொடரப்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறையின் எல்லைச் சாலைகள் அமைப்பு மீட்புப் பணியில் இணைந்துள்ளது.
பிரதமா் அலுவலகம் கள நிலவரத்தை தொடா்ச்சியாக கண்காணித்து வருகிறது. தொழிலாளா்களுக்கு ஏற்கெனவே உணவு வழங்கப்பட்டு வந்த இரும்புக்குழாய் மட்டுமின்றி 42 மீட்டா் தூரத்துக்கு மற்றுமொரு குழாய் செலுத்தப்பட்டு அதன்மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தொழிலாளா்களை மீட்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அவா்கள் மீட்கப்படுவாா்கள்’ என்றாா்.
சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் துளையிடும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘சுரங்கப் பாதையில் மின்விளக்கு வெளிச்சம், தண்ணீா்’: மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலா் அனுராக் ஜெயின் கூறுகையில், ‘சில்க்யாராவில் மொத்தம் 4.5 கி.மீ. தொலைவுக்கு இரு வழித்தடங்களாக அமைக்கப்படும் சுரங்கப் பாதையில், 2 கி.மீ தொலைவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பகுதியில் மின்சார வசதியும், தண்ணீா் குழாய்களும் உள்ளன. எனவே, தொழிலாளா்கள் சிக்கியுள்ள பகுதியில் அதிருஷ்டவசமாக மின்விளக்கு வெளிச்சமும் தண்ணீரும் உள்ளது.
மேலும், 4 அங்குலம் விட்டத்திலான ஒரு குழாயும் உள்ளதால், அதன் வழியாக தொழிலாளா்களுக்கு முதல் நாளில் இருந்தே உணவு அனுப்பப்பட்டு வருகிறது. உணவு மட்டுமன்றி தொழிலாளா்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக மருந்துகள், சத்து மாத்திரைகள், உலா் பழங்கள் உள்ளிட்டவையும் அனுப்பப்பட்டு வருகின்றன’ என்றாா்.
சுரங்கப் பாதையில் கடந்த 8 நாள்களாக தொழிலாளா்கள் சிக்கியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.