மகிந்த, கோட்டாபய, பசிலின் குடியுரிமை பறிக்கப்பட வாய்ப்பு
இலங்கை வங்குரோத்து அடையக் காரணமான கோட்டாபய, மகிந்த, மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பேது சஜித் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
அதற்காக செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதால், விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறித்த குழுவிடம் நட்டஈடு பெற்றுக்கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குடியுரிமை
இந்த யோசனைக்கு ஆதரவாக அனுரகுமார திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் கருத்து வெளியிட்டுள்ளனர். அமைச்சர் பந்துல குணவர்தன அதற்கு எதிராகப் பேசியுள்ளார்.
அங்கு சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,
நாட்டை வங்குரோத்து அடையச் செய்த கும்பலுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நாடு முழுவதும் எழுந்துள்ளது.
இனியும் இவர்கள் இவற்றைத் தொடர்வார்களா என்று நாடு கேட்கிறது. எனவே, இவர்களுக்கு மேலும் குடியுரிமை வழங்குவது பொருத்தமற்றது.
ஜனாதிபதி ஆணைக்குழு
உச்ச நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட குழுவின் குடியுரிமைகளை இரத்து செய்யும் நடவடிக்கை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி மட்டுமே செயற்பட முடியும்.
நாட்டின் 200 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சார்பாக ஜனாதிபதி அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் நாங்கள் பரிந்துரைக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.