2 மணி நேரத்தில் லோன் என பேஸ்புக் போஸ்ட்.. ₹90,000யை அசால்ட்டாக தூக்கிய மோசடி கும்பல்!
பேஸ்புக்கில் உடனடி லோன் தருவதாக வந்த தகவலை நம்பி மும்பை சேர்ந்த ஒருவர் ரூ.90,000 இழந்துள்ளார்.
லாஜிஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்யும் 56 வயதுடைய மும்பை சேர்ந்த நபர் இரண்டு மணி நேரத்தில் லோன் தருவதாக சொல்லி பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட ஒரு போஸ்ட்டை பார்த்துள்ளார். தனது மகளின் படிப்பிற்காக லோன் வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்த இவருக்கு இது ஒரு நல்ல யோசனையாக தெரிந்துள்ளது.
உடனடியாக அந்த போஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு லோன் விண்ணப்பம் ஒன்றை நவம்பர் 8 அன்று அனுப்பியுள்ளார். அவர் விண்ணப்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்த நிறுவனத்தின் நபர் என்ற முறையில் ஒரு நபர் ஃபோன் செய்துள்ளார். அவருடைய லோன் விண்ணப்பம் அப்ரூவ் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை பெறுவதற்கு GST, NOC கட்டணங்கள், RBI கட்டணங்கள் மற்றும் இரண்டு அட்வான்ஸ் இன்ஸ்டால்மென்ட் உட்பட பல்வேறு விதமான கட்டணங்களை அவர் செலுத்த வேண்டும் என்றும் அந்த காலர் கூறியுள்ளார். மொத்தமாக அவர் செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டணம் 90 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
இது உண்மை என நம்பி அந்த நபர் உடனடியாக அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எந்த ஒரு லோன் தொகையையும் அவர் பெறவில்லை. நிறுவனத்தை சேர்ந்த அந்த நபருக்கு போன் செய்ய இவர் முயற்சித்த போது, கூடுதலாக இன்னும் சில பேமெண்ட்களை செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த சமயத்தில் தான் இவருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் சென்று புகார் ஒன்றை பதிவு செய்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பிரிவு 420 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படாத அந்த நபர்கள் மீது கலம்போலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது இந்தியாவில் நடைபெறும் ஆன்லைன் மோசடி சம்பந்தப்பட்ட முதல் வழக்கு அல்ல. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான முறைகளில் மக்களை மோசடிக்காரர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். உதாரணமாக ‘டாஸ்க் பிராடு’ (task fraud) என்று சொல்லப்படும் ஒரு ஆன்லைன் மோசடியில் சிறு சிறு டாஸ்குகளை செய்யச் சொல்லி ஆரம்பத்தில் நம்பிக்கையை பெறுவதற்காக பணத்தை கொடுத்து, பிறகு பெரிய அளவில் டாஸ்குகளை செய்யச் சொல்லி பணத்தை மோசடி செய்து வரும் கும்பல் குறித்து சமீபத்தில் பிரபலமாக பேசப்பட்டது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஆன்லைனில் வரக்கூடிய தெரியாத நபர்களை ஒருபோதும் நம்பாதீர்கள். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பர்சனல் லோன் எடுப்பதாக இருந்தாலும் சரி, ஃப்ரீலேன்ஸ் ப்ராஜெக்ட் அல்லது முதலீட்டு ஆலோசனை போன்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கவனமாக இருக்கவும். ஒரு நிறுவனம் நம்பகமானதா இல்லையா என்பதை நீங்கள் பலமுறை அறிந்து கொண்ட பின்னரே அந்த வேலையில் இறங்க வேண்டும்.