;
Athirady Tamil News

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும் மனித எச்சங்கள் இருக்கக்கூடும்: சுமந்திரன் சந்தேகம்

0

கொக்குத்தொடுவாயில் வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை இன்று(20.11.2023) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீளவும் இன்று காலை ஆரம்பமாகி இருக்கின்றது.

அகழ்வு பணிக்கான நிதி
தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிதியினை வைத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வை மேற்கொள்ள முடியும்.

இது பல்வேறு தளங்களில் உடல்கள் காணப்படுகின்ற காரணத்தினாலே நீண்ட காலமாக இதனை செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதனை தற்போது உணர்ந்திருக்கின்றார்கள்.

அது ஒரு பக்கம் இருக்க வீதிக்கு குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட சில வேளை மனித எச்சங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகையினாலே இதனை வருகின்ற நாட்களில் பரிசீலித்து நீண்ட நாட்களாக செய்யப்பட வேண்டிய செயன்முறை என்ற அடிப்படையில், அரசாங்க அதிபர், அதற்கான நிதியை விடுவிப்பதற்கான முயற்சிகள் இன்றிலிருந்து ஆரம்பமாக இருப்பதாகவும் அந்த நிதி விடுவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

பரிசோதனை
ஆகையினாலே இந்த செயற்பாடுகள் தற்போது சரியான முறையில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு உடல்களும் கை, கால், உடம்பு, தலை என அனைத்தும் பொருந்தக்கூடிய வண்ணமாக எடுக்கப்படுகின்ற காரணத்தினால்தான் நீண்ட நேரம் இதற்கு செலவாகின்றது.

உடையாமல் கவனமாக எடுக்கப்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது. ஆகையினால் ஒவ்வொரு கட்டமாக அகழ்ந்து தற்போது 17 உடலங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதனை விட கூடுதலான எண்ணிக்கை இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அவர்களுடைய சீருடைகள் மற்றும் வேறு பல பொருட்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

ஆகையினாலே எந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்பதனையும் சில பரிசோதனைகளின் பின்னர் அறியக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சில நாட்கள் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.