ரணில் முன்வைத்த வரவு – செலவு திட்டத்தில் காணப்படும் தவறை ஏற்றுக்கொள்ள முடியாது – எம்.எஸ். தெளபீக்
அதிபர் முன்வைத்த தேசிய வரவு செலவு திட்டத்தில் உள்ள தவறை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.எஸ். தெளபீக் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சேவையினை உறுதிப்படுத்தல்
“உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் தொழில் செய்கின்ற சுமார் 8ஆயிரம் ஊழியர்கள் இருக்கின்றனர்.
இந்த வரவு செலவு திட்டம் ஊடாக அவர்களையும் அந்த சேவையில் நிரந்தரமாக்குவதற்கான முன்மாெழிவை அதிபர் முன்வைப்பார் என்ற எதிர்பார்ப்புடனே அவர்கள் இருந்தார்கள்.
என்றாலும் அந்த முன்மொழிவு வரவு செலவு திட்ட தமிழ் மொழி மூலமான புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழ் மொழி மூலமான புத்தகத்தில் சேவையினை உறுதிப்படுத்தல் என்ற உப தலைபில், பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் வேறுபட்ட தற்காலிக திட்டங்களின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பல ஊழியர்களது சேவை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை.
180 நாட்களுக்கு அதிக காலம் சேவை புரிந்த அத்தகைய அமைய ஊழியர்களை அரசாங்கத்தின் ஒழுங்கு விதிகளுககு அமைவாக நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த விடயம் வரவு செலவு திட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில புத்தகங்களில் இடம்பெறவில்லை.
அத்துடன் இது தொடர்பாக நிதி அமைச்சிடம் வினவியபோது, இது தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.
அதிபரும் தனது வரவு செலவு திட்ட உரையில் இந்த விடயத்தை வாசிக்கவும் இல்லை. அதேநேரம் அந்த ஊழியர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.
வாழ்க்கை செலவு கொடுப்பனவு
அதனால் இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவு கொடுப்பனவை 10ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வீதங்களுடன் பார்க்கும்போது இந்த அதிகரிப்பு வெறும் கண் துடைப்பாகும்.
அத்துடன் வரவு செலவு திட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திருகோணமலை மாட்டத்தில் கிண்ணியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் அடிக்கடி குடிநீர் பிரச்சினை இடம்பெற்று வருகிறது.
இந்த பிரதேசங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அதேபோன்று கிராமிய பாதைகள் நிர்மாணிப்பதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகயில் திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமிய பாதைகள் பாதிக்கப்பட்டு இன்னும் நிர்மாணிக்கப்படாமல் இருக்கின்றன.
அதனால் இந்த பாதைகளை நிர்மாணிக்கவும் நிதி ஒதுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்க 2பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.