செங்கடல் பகுதியில் கடத்தப்பட்டது கப்பல் : விரிவடையப்போகும் யுத்தகளம்
துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கலக்சி லீடர் என்ற கப்பல் செங்கடல் பகுதியில் வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலை கடத்திய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்
அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Yemen’s Houthis have released footage of hijacking of the ‘Galaxy Leader’ cargo ship in the southern Red Sea.#Hijacking #GalaxyLeader #Houthis #Hamas #Israelpic.twitter.com/sQXlqgYKSG
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) November 20, 2023
கடத்தப்பட்டுள்ள கலக்ஸி லீடர் என்ற சரக்கு கப்பல் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஜப்பானை சேர்ந்த நிறுவனம் இயக்கி வருகிறது. எனினும், இதில் இஸ்ரேலை சேர்ந்த வியாபாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
இதனிடையே, இஸ்ரேலின் கப்பல்கள் எங்களின் “நியாயமான இலக்கு. அது எங்கிருந்தாலும், நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று ஹவுத்தி அமைப்பின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஈரானின் பின்புலத்தில் இயங்குபவர்கள் எனவும் அவர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவி புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், யேமன் கடற்கரையில் அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.