ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் – விளக்கமளித்த நிறுவனம்!
ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விற்பனை நிறுத்தம்
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது “தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 25-ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனை நிறுத்தப்பட உள்ளது” என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆவின் நிறுவனத்தின் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
நிறுவனம் விளக்கம்
இந்நிலையில், ஆவின் மேலாண்மை இயக்குநர் சு.வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நாளொன்றுக்கு 14.50 லட்சம் லிட்டர் பால், ரூ. 1 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
பொது மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பினை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும், அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் சென்னையில் விட்டம் ‘ஏ’ மற்றும் ‘டி’ செறிவூட்டப்பட்ட ‘டிலைட்’ பால் (ஊதா நிற பால் பாக்கெட்) கடந்த மே மாதம் 9-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆவின் நிறுவனம் எல்லா காலக்கட்டங்களிலும் பொது மக்களின் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எந்தவித தங்குதடையுமின்றி வினியோகம் செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.