உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: வடகொரியா
ராணுவ உளவு செயற்கைக்கோள் மலிங்யாங்-1 புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
கடந்த 2 முறை வடகொரியா ஏவிய இந்த உளவு ஏவுகணை தோல்வியடைந்தது. இந்நிலையில், மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை இரவு உளவு ஏவுகணையான மலிங்யாங்-1 ஏவியதாகவும், அது புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்காக உளவு செயற்கைக்கோளைச் செலுத்த இருப்பதாக வடகொரியா தெரிவித்து வருகிறது.
அதன்படி, இதற்கு முன்பு இருமுறை செயற்கைக்கோளைச் செலுத்தும் முயற்சியில் வடகொரியா ஈடுபட்டது. ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், மூன்றாவது முறையாக கடந்த அக்டோபரில் உளவு செயற்கைக்கோளைச் செலுத்த இருப்பதாக வடகொரியா தெரிவித்தது. ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் அந்த முயற்சியைக் கைவிட்டது. இப்போது மீண்டும் உளவு செயற்கைக்கோளைச் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
வடகொரியாவுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு செயற்கைக்கோளை ஏவும் திட்டத்தைக் கைவிடச் செய்யுமாறு தனது நாட்டு அதிகாரிகளுக்கு ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளாா்.
எந்தவிதமான செயற்கைக்கோள் சோதனையையும் வடகொரியா நடத்தக் கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் மாறுபட்ட சோதனை வடிவமாக செயற்கைக்கோள் சோதனையை வடகொரியா கருதுவதால் இந்தத் தடையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ளது.
தங்கள் நாட்டைக் கண்காணிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக வடகொரியா உளவு செயற்கைக்கோள் சோதனையை நடத்த திட்டமிடுகிறது என தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.