யாழில் உள்ள கருவேல மரங்கள் தொடர்பில் ஆராய தீர்மானம்
யாழ்.மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களின் நன்மை, தீமை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சி தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அதன் போது, விவசாயிகளுக்கு அறுவடைக்குரிய கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும், விவசாய அழிவுகள் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், விவசாய நவீன மயமாக்கல் திட்டம் தொடர்பாக விவசாயிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதோடு, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள பயன்தரு மரங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டுமெனவும் , பயன்தரு மரங்களாக புளிய மரம், இலுப்பை மரம் மற்றும் கமுக மரங்கள் ஆகியவற்றை அதிகமாக நாட்டப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டன.
மேலும் கருவேல மரங்களின் நன்மை, தீமை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சி தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்திற்கு பொருத்தமான திராட்சை பழ உற்பத்திக்கான செயற்பாடுகள், செவ் இளநீர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம், தென்னை முக்கோண வலய அபிவிருத்திகள் மற்றும் மீனவ அமைப்புகளின் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டன.
அத்தோடு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், விதை நெல் உற்பத்தி தொடர்பாக அதற்குரிய திணைக்களங்கள் தமது பொறுப்புகளை உரிய வகையில் செயல்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் விவசாய அமைப்புக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக அறிவித்தால் அது தொடர்பாக உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்வுகள் பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்தார்.