கட்டுநாயக்க விமான சேவை முறைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமானப்போக்குவரத்து முகாமைத்துவ முறைமையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையினை இன்று (22) துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்துள்ளார்.
கடந்த காலங்களில், விமானப் புறப்பாடு மற்றும் வந்து சேருவது தொடர்பான தகவல்களை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் கைமுறையாகப் பதிவுசெய்து வந்தது.
அதிநவீன அமைப்பை
இந்த பழைமையான முறைமையினை மேம்படுத்தி, நவீன முறைப்படுத்தி டிஜிட்டல் மயமாக்குவதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று வெற்றிகரமாக விமானப் போக்குவரத்து சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் இந்த அதிநவீன அமைப்பை நிறுவியுள்ளது.
அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதன்மை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் ரேடார் செயற்பாட்டு மையம் ஆகியவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளன.
விமான சேவைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது
இந்த புதிய மேம்பாட்டின் காரணமாக, விமான சேவைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல், சேவையில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதுமாத்திரமல்லாமல் இந்த டிஜிட்டல் முறைமையின் வாயிலாக விமானம் சென்றுகொண்டிருக்கும் உயரம், விமானத்தின் நிலை, மற்றும் விமானத்தின் வேகம் என்பவற்றைத்தாண்டி விமான நிலையத்தின் அண்மைய அமைப்பு மற்றும் விமானம் குறித்த அனைத்துத் தரவுகளையும் மிக துல்லியமாக பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.