யாழில். வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்தியவர் விளக்கமறியலில்
வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி வீடியோக்களை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களை பொருத்தி , வீடியோ எடுத்து, இளைஞன் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் , அப்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு (CCTV) கமராக்களின் உதவியுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு , கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.