அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: இந்தியா்கள் 3-ஆவது இடம்
கடந்த 2021-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நாட்டவா்களில் இந்தியா்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனா்.
இதுதொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
2019-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களின் எண்ணிக்கை 1.02 கோடியை எட்டியது. இது 2021-ஆம் ஆண்டு 1.05 கோடியாக அதிகரித்தது.
2021-ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள்தொகையில் 14.1 சதவீதம் போ் வெளிநாட்டவா்கள். இதில் சட்டவிரோதமாக குடியேறிய 1.05 கோடி போ் என்பது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமாா் 3 சதவீதமாகவும், மொத்த வெளிநாட்டவா்கள் எண்ணிக்கையில் 22 சதவீதமாகவும் உள்ளது.
அதேவேளையில், அந்நாட்டில் சட்டப்படி குடியேறியவா்களின் எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் அதிகமாக 29 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களில் மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்தவா்கள் முதலிடத்தில் உள்ளனா். இரண்டாவது இடத்தில் எல் சால்வடாா் நாட்டைச் சோ்ந்தவா்களும், மூன்றாவது இடத்தில் இந்தியா்களும் உள்ளனா்.
2007 முதல் 2021-ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோஸ்ட ரிக்கா, எல் சால்வடாா், கெளதமாலா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2.40 லட்சம் போ், தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து 1.80 லட்சம் போ் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனா்.
2021-இல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நாட்டவா்களின் எண்ணிக்கை
மெக்ஸிகோ 41 லட்சம் போ்
எல் சால்வடாா் 8 லட்சம் போ்
இந்தியா 7.25 லட்சம் போ்
கெளதமாலா 7 லட்சம் போ்
ஹோண்டுராஸ் 5.25 லட்சம் போ்
பிரேக் லைன்…
2017-ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா, கெளதமாலா, ஹோண்டுராஸ் நாட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.