;
Athirady Tamil News

கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு வழங்கியதாக வட்டுக்கோட்டை பொலிஸார் மீது குற்றச்சாட்டு

0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் சுமார் நான்கு மணிநேர பாதுகாப்பினை வட்டுக்கோட்டை பொலிஸார் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அது தொடர்பில் தெரிவிக்கையில்,

நான் மதியம் எனது தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கசிப்பு வாடை அடித்தது. இதன்போது நானும் என்னுடன் வேலை செய்தவரும் கசிப்பு காய்ச்சும் வாடை அடிப்பதாக பேசிக்கொண்டிருந்தோம்.

இதன்போது கசிப்பு காய்ச்சிய வீட்டுக்காரன் வேலி பக்கத்தில் இருந்து சத்தகம் கட்டிய கொக்கத்தடி மூலம் எனது கழுத்தை அறுக்க முயன்றார். நான் திடீரென்று சத்தகத்தை பிடித்தவேளை அது எனது கையை வெட்டியது. உடனே நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துவிட்டு வந்தேன்.

பின்னர் இரவு நான் எனது வீட்டில் இருக்கும்போது கண்ணாடி போத்தில்களால் எனது வீடு மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தப்பட்டது. வீட்டின் கதவு வாளாலும் கத்தியாலும் வெட்டி சேதமாக்கப்பட்டது.

எனது மகளின் வீடும் எனது வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ளது. இதன்போது நான் எழுப்பிய சத்தத்தை கேட்ட எனது மகள் சம்பவ இடத்திற்கு வந்தவேளை எனது மகள் மீது கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டது. அந்த ஆயுதம் சரிவாக எனது மகளின் கையில் விழுந்ததால், வெட்டு காயம் இல்லாமல் மகளின் கையில் பாரிய கண்டல் காயம் ஏற்பட்டது.

பின்னர் நாங்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து விடயத்தை தெரியப்படுத்தினோம். ஆனால் தாங்கள் அடுத்தநாள் தான் வருவார்கள் என கூறினார்கள். இதன்போது தாக்குதல் நடாத்திய நபர் தாங்கள் பொலிஸாருக்கு காசு கொடுத்ததாகவும் ஆகையால் அவர்கள் வரமாட்டார்கள் என்றும் கூறினார். இந்நிலையில் நாங்கள் கொழும்பு பொலிஸாருக்கு (119) விடயத்தை தெரியப்படுத்தினோம். இவ்வாறு தெரியப்படுத்திய பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸார் இரவு 11 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இவ்வாறு வந்தவர்கள் ஏன் கொழும்பிற்கு (119) அழைப்பு மேற்கொண்டீர்கள் என கேட்டனர். எங்களது உயிர் போன பிறகு நீங்கள் நாளைக்கு வந்து என்ன பிரயோசனம். எங்களது உயிரை காப்பாற்ற தான் அங்கு அறிவித்தோம் என்றோம்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட கசிப்பு காய்ச்சும் நபர் வேறு இடத்தை சேர்ந்தவர். வாடகை வீட்டில் தான் எமது பகுதியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் தாக்குதல் நடாத்திய மூவரும் அந்த வாடகை வீட்டில் பதுங்கினர். உள்ளே சென்று அவர்களை கைது செய்யுமாறு நாங்கள் கூறினோம். வீட்டின் உரிமையாளரும் வீட்டினை தான் திறந்து விடுவதாகவும், அவர்களை கைது செய்யுமாறும் கூறினர்.

ஆனால் உள்ளே சென்று அவர்களை கைது செய்ய தங்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதி வேண்டு என கூறினர். உடனே அங்கு திரண்டிருந்த ஊர்மக்கள் அனைவரும் இணைந்து நாங்கள் அவர்களை பிடித்து வந்து உங்களிடம் கொடுக்கிறோம் என கூறியவேளை அவர்ளையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இவ்வாறு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை யாரும் உள்ளே செல்லவில்லை. வெளியில் நின்ற பொலிஸார் உள்ளே இருந்தவர்களுடன் தொலைபேசியில் கதைத்தவாறு இருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த நாங்கள் அனைவரும் அதிகாலை 3 மணியளவில் சுழிபுரம் பத்திரகாளி மடத்தடிக்கு சென்று அங்கே இருந்தவேளை பொலிஸார் உள்ளே இருந்த மூவரையும் திடீரென ஏற்றிச் சென்றனர்.

பின்னர் தாக்குதலுக்குள்ளான எனது மகள் மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் இதுவரை எம்மிடம் எந்தவிதமான விசாரணைகள் நடாத்தப்படவும் இல்லை, எங்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கவும் இல்லை. இன்றுவரை அந்த வீட்டில் கசிப்பு உற்பத்தி நடக்கிறது.

எமது ஊருக்கு அருகே உள்ள கடை ஒன்றுக்கு பொலிஸாரின் முச்சக்கர வண்டி வரும். கசிப்பு அந்த இடத்தில் வைத்து பொலிஸாரை சந்தித்து காசு கொடுப்பார். உடனே பொலிஸாரின் முச்சக்கர வண்டி திரும்பிச் சென்றுவிடும். எங்களது ஊரில் எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கசிப்பு உற்பத்தியை தடுத்து நிறுத்தி எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.