புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பெண் உட்பட இருவர் தண்ணீரில் மூழ்கி பலி
ஆங்கிலக்கால்வாயில் மீண்டும் ஒரு புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இம்முறை இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன.
புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து
நேற்று, அதாவது, புதன்கிழமை மதியம், சுமார் 100 புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக பிரான்சிலுள்ள Neufchatel-Hardelot என்னுமிடத்தில், கூடியிருந்துள்ளார்கள்.
அப்போது அங்கு வந்த பொலிசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளார்கள். பொலிசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக வேகவேகமாக சிலர் ஒரு படகில் ஏறியுள்ளார்கள்.
சுமார் 60 பேர் ஒரு சிறுபடகில் ஏறிய நிலையில், ஆங்கிலக்கால்வாயில் இரண்டு மணி நேரம் பயணித்த அந்த படகு, உள்ளூர் நேரப்படி 1.00 மணியளவில் தண்ணீரில் கவிழ்ந்துள்ளது.
இருவர் பலி
உடனடியாக பிரான்ஸ் தரப்பிலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள். அவர்கள், தண்ணீரில் தத்தளித்த 58 பேரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்றாலும், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள்.
தண்ணீரில் தத்தளித்த மற்றவர்கள் ஹைப்போதெர்மியா என்னும் அதீத குளிரால் ஏற்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 பேர் படகு மூலமும், ஒருவர் ஹெலிகொப்டர் மூலமும் Boulogne-sur-Mer என்னும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நவம்பரில், இதேபோல ஒரு படகு கவிழ்ந்து, ஒரு கர்ப்பிணிப்பெண் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 27 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.