சீன உளவுக் கப்பல்கள் வருகை தந்த விவகாரம்: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட கருத்து
அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்கு சீன உளவுக் கப்பல்கள் வருகை தந்த விவகாரம், இந்தியாவில் பாதுகாப்பு கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது.
எவ்வாறாயினும், இருதரப்பு உறவுகளில் இது எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது என்று விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டியில் இலங்கை ஒரு போர்க்களமாக மாறக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெற்காசிய அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கு, இலங்கை ஆபத்தை ஏற்படுத்தாது என்று உறுதியளித்துள்ளார்.
இந்திய ஊடகம்
அரசியலில் எதுவும் நடக்காலம் என்று குறிப்பிட்ட அவர், 1988 ஆம் ஆண்டில், இலங்கையை பொறுத்தவரையில் இந்திய துருப்புக்களின் வருகை, ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது என்பதை ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகம் ஒன்றுடனான நேர்காணலின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா தனது சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படும் நிலையில் இலங்கைக்கு வரும் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களில் சோதனை நடத்தப்படும் என்று தாம் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியான மொஹமட் முய்ஸு,அங்கிருக்கும் இந்திய படையினரை திரும்பப்பெறுமாறு இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டமை தொடர்பில் கருத்துரைத்த ரணில், மாலைத்தீவில் உள்ள தற்போதைய ஆட்சியுடன் உறவுகளை கட்டியெழுப்புவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கை
இந்தியப் படைகள் வெளியேறுவது என்பது தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும். இந்தியா அதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. எனவே மாலைத்தீவுடனான உறவை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் ஏனெனில். மாலைத்தீவுக்கு இந்தியாவின் உதவி தேவை என்று ரணில் வலியுறுத்தினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தனது நாட்டை விமர்சித்ததற்காக இந்திய அரசை விக்ரமசிங்க கடுமையாக சாடினார்.
இந்தியர்களின் கருத்துக்களுடன் தமக்கு உடன்பாடு இல்லை. எங்களின் சாதனையை இந்தியா விமர்சித்தது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2024 லோக்சபா தேர்தல் பற்றி கருத்துரைத்த அவர், புதுடில்லியின் அரசியல் முன்னேற்றங்கள் இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்ட விக்ரமசிங்க,எது நடந்தாலும் இந்தியாவுடனேயே இலங்கை வாழவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.