;
Athirady Tamil News

வடக்கு கிழக்கில் சேவையாற்றுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சி!

0

வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதற்கான பயிற்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், இடையில் பல்வேறு காரணங்களால் அது சற்று மந்த நிலையிலேயே உள்ளது.

எனினும், மீண்டும் அதனை மேம்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்றக்கூடிய 6,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், , அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய டளஸ் அழகப்பெரும எம்.பி., இது தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டளஸ் அழகப்பெரும எம்.பி. தனது கேள்வியின் போது, “வடக்கு, கிழக்கில் தமிழை தமது தாய் மொழியாகக் கொண்ட மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமது தாய் மொழியில் முறைப்பாடு முன்வைக்க முடியாமல் பெரும் கஷ்டப்படுகின்றனர்.

தமது தாய் மொழியில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கும் முடியாத நிலையே அங்கு காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் சில வேளைகளில் இனப் பிரச்சினைக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன.

இது அநீதியான ஒரு விடயமாகும். மக்கள் தமது தாய் மொழியில் முறைப்பாட்டை அல்லது வாக்குமூலத்தை வழங்க முடியாத நிலை மிகவும் துரதிஷ்டமானது.

நாட்டில் 85,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலுள்ள நிலையில், அவர்களில் ஒரு சதவீதமாவது இவ்வாறு தமிழ் மொழியில் செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள் கிடையாது.

அந்த வகையில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் துறையில் நியமிப்பது தொடர்பான பொறிமுறையொன்றை உருவாக்குவது அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ, தமிழ் மொழியில் சேவையாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.