;
Athirady Tamil News

உலகில் அதிகளவில் கொலை செய்யப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள் : ஐ.நா அறிவிப்பு!

0

உலகளாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டில் மாத்திரம் 89 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர் காடா வாலி நேற்றுமுன்தினம்  (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் கொலைகள்
கடந்த இரண்டு தசாப்தங்களில் மிகவும் அதிகமாக பெண் கொலைகள் இடம்பெற்ற வருடமாக 2022 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

இவ்வாறாக பதிவாகியுள்ள பெண் கொலைகளில் 55 வீதமான கொலைகள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களால் நடத்தப்பட்டவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஆசியாவுக்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமத்துவமின்மை மற்றும் ஆணாதிக்கம்
இந்த நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிகளவில் கொலை செய்யப்படுவது கவலையளிப்பதாக காடா வாலி தெரிவித்துள்ளார்.

மனிதகுலம் சமத்துவமின்மை மற்றும் ஆணாதிக்கத்துடன் தொடர்ந்தும் போராடுவதை இந்த நிலை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த துன்பகரமான போக்கு மற்றும் ஆழமாக வேரூன்றிய சமத்துவமின்மை, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கங்களிடமான கோரிக்கை
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்ப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வலுவான மற்றும் செயல்திறன் மிக்க நிறுவனங்களை நிறுவுவதற்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என காடா வாலி வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிறுவனங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான நிவாரணத்தை வழங்குவதற்கும் வழி வகுக்க வேண்டும் என அவர் மேலும் கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.