மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனம் – சரத் வீரசேகர
உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். இலங்கையிலிருந்து புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும் துடிப்புடன் உள்ளார்கள், செயற்படுகிறார்கள்.
இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா? என்பதை ஆராய வேண்டும். மாவீரத் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் இன்று அவருக்கு அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் தான் நான் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கும், 21 ஆவது திருத்தத்துக்கும் எதிராக வாக்களித்தேன்.
உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகளை அழித்துள்ளோம். இலங்கையில் புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் துடிப்புடன் உள்ளார்கள், செயற்டுகிறார்கள். இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா ? என்பதை ஆராய வேண்டும்.
யுத்ததை வெற்றிக் கொண்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்குவதில்லை. இராணுவ அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலை தற்போதை இராணுவ அதிகாரிகளுக்கும் சேவை ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஜெனிவா விவகாரத்தில் இலங்கை தவறிழைத்துள்ளது. 2009.01.19 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து 2009.05.27 ஆம் திகதி ஜேர்மனி உட்பட 17 நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டு வந்தன. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய செயலாளர் நாயகம் பாங்கி மூன் பல பரிந்துரைகளை முன்வைத்தார்.
அதனை தொடர்ந்து தருஸ்மன் அறிக்கை சமர்ப்பிக்கப்டப்பட்டது. அதில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக பொய்யான தரப்படுத்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு முரணாக பரணகம குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் 30-1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியது. யுத்த காலத்தில் இடம்பெற்ற யாதார்த்த உண்மைகள் ஜெனிவாவுக்கு குறிப்பிடப்படவில்லை. ஆகவே இனியாவது இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.
மாவீரர் தினம் பற்றி தற்போது பேசப்படுகிறது. நாட்டை பிளவுப்படுத்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனமானது என்பதை பகிரங்கமாக குறிப்பிடுவேன்.
மாவீரர் தினம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரும் முயற்சிக்கிறார்கள். விடுதலை புலிகள் தமிழர்களை பயணக் கைதிகளாக வைத்திருந்த போது இவர்கள் எங்கு சென்றார்கள். 2இலட்சத்து 95 ஆயிரம் பேரை இராணுவத்தினர் மீள்குடியேற்றம் செய்தார்கள். 8000 தமிழர்களுக்கு இராணுவத்தினர் தமது சொந்த நிதியில் வீடு கட்டிக் கொடுத்தார்கள். அப்போது கூட்டமைப்பினர் தமிழ் தேசியம் பற்றி பேசிக் கொண்டு வரவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. கூட்டமைப்பினர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பதவி பிரமாணம் செய்வதற்கு முன்னர் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறிழித்துள்ளார். ஹிட்லர், முசோலினி,சதாம் உசேன் ஆகியோர் அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் அரசியல் செயற்பாடுகள், அரசியல் கட்சிகள் அழிக்கப்பட்டன. அதே போல் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் அனுதாபம் இன்று பூமியதிர்ச்சியாக மாற்றமடைந்துள்ளது என்றார்.