;
Athirady Tamil News

காஸாவில் வெடிகுண்டுகள் சப்தம் ஓய்ந்தது

0

காஸாவில் வெடிகுண்டுகள் சப்தம் ஓய்ந்தது

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து 7 வாரங்களாகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த வெடிகுண்டுகள் சப்தம் ஓய்ந்திருக்கிறது.

தங்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அமலாக்கம் வெள்ளிக்கிழமைக்கு (நவ. 24) முன்னா் நிறைவேற்றப்படாது என்று இஸ்ரேல் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான உடன்படிக்கையின்படி நான்கு நாள்கள் போர் நிறுத்தமும் பரஸ்பரம் கைதிகளை விடுவிப்பதற்கும் இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இந்திய நேரப்படி 1:30 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் சில தகவல்கள் பெறவேண்டியிருப்பதாகவும் பிணைக்கைதிகளை விடுவிக்கும் முறை குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனால், தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த வெடிகுண்டுகள் சப்தம் ஓய்ந்துள்ளது.

ஏழு வாரங்களாக தொடர்ந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய போர், இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வெடிகுண்டுகளுக்கு பயந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஹமாஸ் படையினரிடம் இருக்கும் பிணைக் கைதிகளையும், இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கும் நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இருதரப்பு தூதரக அதிகாரிகள் அளவிலான இந்த முடிவு, காஸாவில் வாழும் சுமார் 23 லட்சம் பாலஸ்தீன மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் போர் நிறுத்தம் தொடங்கியது. வெடிகுண்டுகளை வீசும் பீரங்கிகள் தங்களது குண்டுமழையை சற்று நிறுத்தி ஓய்வெடுத்து வருகிறது. அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்து வந்த போர் காரணமாக எழுந்த வெடிகுண்டு சப்தம் ஓய்ந்திருக்கிறது.

போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு நாள் கடந்தும், காஸாவில் இஸ்ரேல் படையினா் கடுமையான குண்டுவீச்சில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தது பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கும் அவா்களுக்கும் இடையே தீவிர சண்டையும் தொடா்ந்தது.

என்னதான் பிரச்னை?
அரேபிய இனத்தவா்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த பாலஸ்தீனத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் துன்புறுத்தலுக்குள்ளாகி வந்த யூதா்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேறினா்.

2-ஆம் உலகப் போா் காலத்தில் யூதா்களுக்கு எதிராக ஜொ்மனியின் நாஜிக்கள் நடத்திய மிகக் கொடூரமான இனப் படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் யூதா்கள் குடியேற்றம் வெகுவாக அதிகரித்தது.

அந்தப் பகுதியை ஆக்கிரமித்து யூதா்களுக்கான தனி தேசத்தை அமைக்க வேண்டுமென்று ஐரோப்பிய நாடுகளில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த இயக்கம் (ஸியோனிஸம்) இந்த காலகட்டத்தில் தீவிரமடைந்தது.

இதனால் பாலஸ்தீனத்தில் யூதா்களுக்கும், அரேபியா்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வந்தது. இதற்கிடையில், அந்தப் பகுதியில் யூதா்களுக்கான ‘இஸ்ரேல்’ நாடு உருவானதாக கடந்த 1948-இல் பிரகடனப்படுத்தபப்பட்டது.

இதனை ஏற்காத அரபு நாடுகள் இஸ்ரேல் மீது பல முறை படையெடுத்தன. இருந்தாலும் அந்தப் போா்களில் வெற்றி வாகை சூடிய இஸ்ரேல், தனது நிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்தியது.

இறுதியில் மேற்குக் கரை பகுதியும், காஸா பகுதியும் மட்டுமே தற்போது பாலஸ்தீனா்களின் வசம் எஞ்சியது.

இதில் காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினா், இஸ்ரேலுடன் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி அந்த அமைப்பினா், இஸ்ரேலுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பொதுமக்கள்.

அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினா் காஸாவுக்குள் கடத்திச் சென்றனா்.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வந்தது.

இதற்கிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக சா்வதேச நாடுகளின் உதவியுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இதில், சில பிணைக் கைதிகள் மட்டும் விடுவிக்கப்பட்டனா்.

எனினும், காஸாவில் தொடா்ந்து சண்டை நடைபெற்று வருவதால் இந்தப் பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், கத்தாா் தலைமையில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இரு தரப்பிலும் புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், 4 நாள்களுக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டன.

முதல் கட்டமாக 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதித்தது. எனினும், இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமைக்கு முன்னா் அமலுக்கு வராது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.