உயர்தர மாணவர்களுக்கு புதிய திட்டம் : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்தப் பாடநெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக அடுத்த உயர்தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் இந்த பாடநெறிக்கான விண்ணப்பங்களை உடனடியாக கோரத் தொடங்கவுள்ளதாகவும், ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக தங்களுக்கு விருப்பமான இரண்டு தொழில்நுட்ப பாடங்களைத் தெரிவு செய்து இந்தப் பாடநெறியைத் தொடரலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்தரப் பெறுபேறுகளை பெறும் வரை 4 மாதங்கள் இந்தப் பாடத்திட்டத்தை மாணவர்கள் கற்க முடியும் என்றும், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள் தவிர எஞ்சிய மாணவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டு பொருத்தமான பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு ஏற்ற தொழிற்கல்வி கற்கை நெறியை கற்கும் வாய்ப்பும், குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளும் இப்பாடநெறியை கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.