;
Athirady Tamil News

இந்திய பெருங்கடலில் பதற்றம் : இஸ்ரேலிய கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் : பின்னணியில் ஈரான்!

0

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உலகையே உலுக்கி இன்று 04 நாட்களாக போர் நிறுத்தம் எனும் கட்டத்தில் இருக்கும் போது, உலக நாடுகளின் நகர்வுகள் அவ்வாறு அமையவில்லையென எண்ணத் தோன்றுகிறது.

அவ்வகையில், கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பெருங்கடலில் இஸ்ரேல் பில்லியனியரின் கப்பல் ஒன்று சந்தேகத்துக்குரிய ட்ரோனால் தாக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிஎம்ஏ சிஜிஎம் சிமி என்ற கப்பலே இவ்வாறு ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

சர்வதேச கடல் பரப்பு
4 நாட்கள் தற்காலிகமாக போர் நிறுத்தத்தில் உள்ள நிலையில் இந்தத் தாக்குதல், போர் நடைபெறும் எல்லைகளை விரிவடைய செய்வதுடன் பல நாடுகளுக்கிடையே சச்சரவையும் ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

இது தொடர்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி சர்வதேச ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்,

“ மால்டா நாட்டின் கொடி ஏந்திய கப்பல் மீது, முக்கோண வடிவிலான வெடிகுண்டு தாங்கிய ஷாஹெத் 136 வகை ட்ரோனால் சர்வதேச கடல் பரப்பில் கப்பல் இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ட்ரோன் கப்பலில் வெடித்து கப்பலுக்குச் சேதம் ஏற்பட்ட போதும் கப்பலில் பணியாற்றுபவர்களுக்கு எந்தக் காயமும் இல்லை. தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.” என்றார்.

அத்துடன், அவர் எந்த அடிப்படையில் அந்த ட்ரோன் ஈரானைச் சேர்ந்தது என சந்தேகப்பதிற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தானியங்கி அடையாளம் காட்டும் கருவி
பிரான்ஸைச் சேர்ந்த இஸ்ரேலிய தொழிலதிபரின் கப்பலான இது கடந்த சில நாட்களாக தானியங்கி அடையாளம் காட்டும் கருவியை அணைத்து வைத்திருந்தது. கப்பல் எங்குள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள, கப்பல்களில் இந்தக் கருவி செயல்பாட்டிலேயே இருக்கும்.

கப்பல் தாக்கப்படலாம் என்பதாலேயே இந்தக் கருவியை குழுவினர் அணைத்து வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இடன் ஓபேர் என்கிற இஸ்ரேலியரால் நிர்வாகிக்கப்படும் சிங்கப்பூரில் உள்ள ஈஸ்டர்ன் பசுபிக் ஷிப்பிங் நிறுவனத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கப்பலின் நிர்வாக தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

ஈரானும் இஸ்ரேலும் மறைமுக போரில் சில ஆண்டாகவே இருக்கும் நிலையில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேல் கப்பல்களை ஈரான் தாக்கியுள்ள நிகழ்வுகள் இதற்கும் முன்பும் நடந்துள்ளதால் இதன் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.