;
Athirady Tamil News

நடந்து சென்றவர்கள் மற்றும் போலீசார் மீது அமெரிக்கா இளைஞர்கள் தாக்குதல் – சென்னையில் பரபரப்பு!

0

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் மது அருந்திய 2 அமெரிக்க இளைஞர்கள் ஹோட்டலில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கண்மூடித்தனமாகத் தாக்குதல்
நிதானம் இல்லாத அளவிற்கு மது போதையில் இருந்த அந்த இரண்டு இளைஞர்களையும் ஹோட்டல் பவுன்சர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற்றி ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்த அமெரிக்க இளைஞர்களில் ஒருவர் திடீரென ஜெமினி சிக்னல் அருகே ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து சாலையில் நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் கோபமடைந்த பொதுமக்கள் சிலர் பதிலுக்கு அந்த அமெரிக்க இளைஞரைத் தாக்கி சாலை ஓர நடை பாதையில் அமர வைத்ததாகத் தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த அமெரிக்க இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

மது போதையிலிருந்த அந்த இளைஞர் வெறி பிடித்தது போல் கூச்சலிட்டு அங்கிருந்த காவல் ஆய்வாளர், காவலர்கள் பொதுமக்கள் என அனைவரையும் துரத்தி துரத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை
பின்னர் இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் காவலர்களுக்கு உதவி செய்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசாரின் வாகனத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மது போதையில் அராஜகம் செய்த அந்த இளைஞர்கள் அமெரிக்காவின் கேலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மெல்கார் என்பதும், இவர்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டு அதிக அளவில் மது அருந்தியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.