‘சேரி மொழி’ சர்ச்சை: ‘மன்னிப்பு கேட்க முடியாது’ – நடிகை குஷ்பு திட்டவட்டம்!
‘சேரி மொழி’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகை குஷ்பு திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு
அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள்.
அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேசமுடியாது என்று பதிவிட்டார். அவரின் அந்த பதிவில் ‘சேரி மொழி’ என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு. இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் எதிர்வினைகள் எழுந்து வருகின்றன.
பேட்டி
இந்நிலையயில் நேற்று சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எந்த இடத்திலும் நான் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை.
எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசுவேன். ஊர் பெயர்களிலும் சேரி என்ற பெயர் உள்ளது. வேளச்சேரி என்பதற்கு என்ன அர்த்தம்? வேள ஏரி அல்ல. வேளச்சேரி தான். அதைப்போல அரசு ரெக்கார்டிலும், அந்த வார்த்தை உள்ளது. எனவே நான் பேசியதில் தவறு இல்லை. இதனால், நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன்.
நான் பேசியது ஒன்று, அதைத் திரித்து தவறுதலாக கூறுகின்றனர். எந்தப் பகுதி மக்களாக இருந்தாலும், அவர்கள் நமக்கு சமமாக உட்கார்ந்து வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வருவதாக கூறினார்கள், ஆனால் வரவில்லை; நான் காத்திருக்கிறேன் என்று கூறினார்.