கோப் குழு தலைவர் மீதான சர்ச்சை: எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்
நாடாளுன்ற கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார இல்லாமல், சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான, குழுவின் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நேற்று(25) நடைப்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி சந்தித்த தோல்விகளை அடுத்து சிறிலங்கா கிரிக்கெட்டின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அதன் நிர்வாக சபையும் கலைக்கப்பட்டது.
இடைக்கால தடை
இதற்காக மாற்று தற்காலிக நிர்வாக சபையும் உருவாக்கப்பட்டது, எனினும் நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்தது.
எனவே பழைய நிர்வாக சபையே இன்னும் செயலில் உள்ளது இந்தநிலையில் சிறிலங்கா கிரிக்கெட்டின் ஊழல்கள் தொடர்பில் கோப் குழு விசாரணைகளை மேற்கொண்டது.
இருப்பினும் இந்த விசாரணைகளின் போது கோப் குழுவின் தலைவரான ரஞ்சித் பண்டார, சிறிலங்கா கிரிக்கெட்டின் சார்பாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தலைவரில்லாத கோப் குழு
அத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் அவரின் மகனும் அந்த விசாரணையின்போது பிரசன்னமாகியிருந்தார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கோப் குழுவின் தலைவர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை விசாரணை குழு கூட்டப்படாது என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே சிறிலங்கா கிரிக்கெட் தொடர்பான விசாரணைகள், தலைவரில்லாத கோப் குழுவின் முன்னிலையில் இடம்பெறவுள்ளன என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.