ஹமாஸ் படைகள் விடுவித்த 4 வயது பணயக்கைதி: ஜோ பைடன் சொன்ன வார்த்தை
தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலின் போது கடத்தப்பட்ட நான்கு வயது இஸ்ரேலிய-அமெரிக்க சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு வயதேயான சிறுமி
இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே முன்னெடுக்கப்பட்டு வரும் போர் நிறுத்த நடவடிக்கையின் மூன்றாவது நாள் 17 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன மக்கள் விடுதலையாகியுள்ளனர்.
ஹமாஸ் விடுவித்த 17 பணயக்கைதிகளில் ஒருவர், நான்கு வயதேயான சிறுமி Avigail Idan என தெரியவந்துள்ளது. அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் துப்பாக்கிதாரி சிறுமி Avigail Idan-ன் வீடு புகுந்து பெற்றோரை படுகொலை செய்ததுடன், சிறுமியை சிறை பிடித்து சென்றுள்ளார்.
ஹமாஸ் பிடியில் இருக்கும் போது தான் சிறுமிக்கு நான்கு வயதாகியுள்ளது. இந்த நாளுக்காக நம்பிக்கையுடன் காத்திருந்ததாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவிகாயில் பத்திரமாக வீடு திரும்பியதற்கு எங்கள் ஆறுதலையும் நன்றியையும் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை என்றும் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அவிகாயிலின் விடுதலையில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கத்தார் அரசு மற்றும் பிறருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
அமெரிக்கா அளித்த தொடர் அழுத்தம்
முன்னதாக, ஜனாதிபதி பைடன் தெரிவிக்கையில், சிறுமி அவிகாயில் ஒரு பயங்கரமான சூழலை அனுபவித்திருப்பார். அந்த நிலை நினைத்துப் பார்க்கவே முடியாதது என்றார். மேலும், சிறுமியுடன் இருப்பவர்கள் அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
அத்துடன், தற்போது சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார். நானும் மனைவியும், ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும், சிறுமியின் நலனுக்காக வேண்டுகிறோம் என்றார்.
அமெரிக்கா அளித்த தொடர் அழுத்தம் காரணமாகவே பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் மேலதிக பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட 17 பணயக்கைதிகளில் 14 பேர் இஸ்ரேலியர்கள் எனவும் மூன்று பேர் தாய்லாந்து நாட்டவர்கள் எனவும், இஸ்ரேலியர்களில் ஒன்பது பேர் சிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.