மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு நாடு கடத்தப்படும் இந்தியர்: வெளிவரும் விரிவான பின்னணி
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை, கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள, ஓமனுக்கு நாடு கடத்துவதை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்தியர் மீது கொலை வழக்கு
கடந்த 2019 ஜூலை மாதம், ஓமன் நாட்டில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார், தற்போது விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் இந்தியர். இந்த நிலையில் தொடர்புடைய வீட்டில் ஒரு ஓமன் நாட்டவர் மற்றும் அவரது மனைவி மற்றும் மூன்று சிறார்கள் இறந்து கிடந்தனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில், அந்த இந்தியர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் அந்த நபர் இந்தியாவுக்கு தப்பியுள்ளார்.
தற்போது அவரை ஓமன் நாட்டுக்கு நடுகடத்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த கொலை வழக்கில் தாம் குற்றமற்றவர் என்றே அந்த நபர் கூறி வருகிறார்.
தேடப்படும் குற்றவாளிகள்
சம்பவத்தின் போது அந்த ஓமன் நாட்டவர் பணம் எடுப்பதற்காக தனது ஏடிஎம் கார்டை பின்னுடன் கொடுத்ததாகவும், ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்தபோது குடும்பத்தினர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடலைத் தொட்டு அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று பார்த்ததாகவும், அதனால் அவரது கைரேகைகள் மற்றும் டிஎன்ஏ உடல்களில் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் இந்தியர்கள் நால்வர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் நால்வரும் இந்தியாவுக்கு தப்பிய நிலையில், தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.