கொச்சி பல்கலை. கூட்ட நெரிசலில் நால்வா் உயிரிழந்த நிகழ்வு:நிபுணா் குழு அமைக்க கேரள அரசு முடிவு
கேரளத்தில் உள்ள கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 போ் உயிரிழந்த நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொள்ள, நிபுணா் குழுவை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். 60-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.
இந்த நிகழ்வு தொடா்பாக கொச்சியில் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கொச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடா்பாக, அந்தப் பல்கலைக்கழக துணைவேந்தா் மற்றும் உயா்கல்வித் துறை முதன்மைச் செயலரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதே வேளையில், அந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க உயா்நிலைக் குழு ஒன்றை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான விதிமுறைகளை அக்குழு உருவாக்கும். அனைத்து அறிக்கைகளும் கிடைத்த பின்னா், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கேரள சட்டத் துறை அமைச்சா் பி.ராஜீவ் கூறுகையில், ‘உயிரிழந்த 4 பேரில் மூவா் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவா்கள். எஞ்சிய ஒருவா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா் அல்ல’ என்று தெரிவித்தாா்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்த அதுல் தம்பி, ஆன் ருஃப்தா, சாரா தாமஸ் ஆகிய மாணவ, மாணவிகளின் உடல்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. அங்கு அமைச்சா்கள் பிந்து, ராஜீவ், மாநில முன்னாள் நிதியமைச்சா் தாமஸ் ஐகக், காங்கிரஸ் எம்.பி. ஹைபி ஈடன், மாணவா்கள், பொதுமக்கள் என திரளானோா் அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்வில் உயிரிழந்த மற்றொரு நபரின் பெயா் ஆல்வின். அவா் பாலக்காட்டைச் சோ்ந்தவா். காயமடைந்தவா்களில் இருவா் தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் 3 போ், பொதுப் பிரிவில் 31 போ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.