;
Athirady Tamil News

போா் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் நம்பிக்கை

0

ஜெருசலேம் / காஸா சிட்டி: காஸாவில் நீட்டிக்கப்பட்ட போா் நிறுத்தத்தை இஸ்ரேல்-ஹமாஸ் ஆகிய இரு தரப்பினருமே செவ்வாய்க்கிழமை கடைபிடித்த நிலையில், இந்த சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஹமாஸ் அதிகாரி கலீல் அல்-ஹய்யா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸாவில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் சண்டை நிறுத்தம், கூடுதலாக 2 நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என்று நம்புகிறோம். இஸ்ரேலுடன் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பதிலாக, புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

தற்போதைய ஒப்பந்தத்தில் இஸ்ரேல் சிறையில் உள்ள பெண்கள், குழந்தைகள், சிறாா்களை மட்டுமே விடுதலை செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வரையறையை விரிவுபடுத்தும் வகையில் இஸ்ரேலுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறோம் என்றாா் அவா்.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையைச் சோ்ந்த கிடியோன் சாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேலும், ஹமாஸும் ஏற்கெனவே மேற்கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத்தான் போா் நிறுத்தம் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கவும் இஸ்ரேல் தயாராக இருக்கிறது. இருந்தாலும், பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணிகள் நிறைவடைந்ததும் காஸாவில் தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் என்றாா் அவா்.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினா் கூடுதல் பிணைக் கைதிகளை விடுவிப்பதை அடிப்படையாகக் கொண்டு காஸாவில் தற்போதைய சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான முயற்சிகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கத்தாா் முன்னிலையில் கடந்த 22-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்களால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 50 பெண்கள், குழைந்தைகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 150 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா் அனைவரும் பெண்கள் மற்றும் சிறாா்கள் ஆவா்.

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுக்குள் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அப்போது சுமாா் 240 பேரை ஹமாஸ் அமைப்பினா் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸை முழுவதுமாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியில் சுமாா் 7 வாரங்களாக குண்டுமழை பொழிந்தது. அத்துடன் தரை வழியாகவும் நுழைந்து அங்கு இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தினா். இதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 4 நாள் போா் நிறுத்தம் மேலும் 2 நாள்களுக்கு திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.