இலாபம் ஈட்டும் தளமாக மாறவுள்ள மத்தள விமான நிலையம்!
ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் தளமாக மாற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (29) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தி வேலைகளுக்கு உதவுவதற்காக ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலாபம் ஈட்டும் தளமாக
மத்தள விமான நிலையத்தில் வைத்து விமானங்களை ஒழுங்கமைத்தல் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதன் மூலமாக அதிகமான இலாபம் ஈட்டக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அமைச்சர் இதன் போது கூறியிருந்தார்.
மத்தள விமான நிலையத்தினால் ஏற்பட்ட இழப்புகள் 1.5 பில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மிகக் குறைந்த இழப்பு இதுதான் எனவும் அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிவிழந்து கிடைக்கும் விமான நிலையத்திற்குரிய அபிவிருத்திகளைச் செய்து மீண்டும் இலாபம் ஈட்டும் தளமாக அதனை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.