8 பேருடன் கடலில் விழுந்தது அமெரிக்க ராணுவ விமானம்
8 பேருடன் சென்று கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் ‘ஆஸ்ப்ரே’ ரக விமானம் ஜப்பான் அருகே கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
இது குறித்து ஜப்பான் கடலோரக் காவல்படை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
ஜப்பானின் தெற்குக் கடல் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதாக அந்தப் பகுதியில் இருந்த ஒரு மீன்பிடி படகிலிருந்து எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து அங்கு நடத்திய தேடுதல் வேட்டையில் ஆஸ்ப்ரே ரக விமானத்தின் சிதறல்களையும் ஒரு நபரையும் கண்டறிந்தோம். விபத்துப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா். எனினும், கடல் பகுதியில் கண்டறியப்பட்டவரின் நிலைமை குறித்து அவா் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
ஹெலிகாப்டரைப் போல் செங்குத்தாகப் புறப்படவும், தரையிறங்கவும் செய்யும் ஆஸ்பிரே ரக விமானங்கள் (படம்) , உயரத்துக்குச் சென்ற பிறகு மற்ற விமானங்களைப் போல புரொப்பல்களின் உதவியுடன் பாய்ந்து செல்லக் கூடியவை ஆகும். அமெரிக்காவின் மரைன் படையினா், கடற்படை, விமானப் படை ஆகியவை இந்த வகை விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன.