கிளிநொச்சியில் குடிநீர் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(30) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தின் போது மக்கள் எதிர்நோக்கிவருகின்ற இடர்பாடுகள் பிரச்சினைகள் மற்றும் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் பொதுமக்களால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகம் தொடர்பில் சுத்தமான பாதுகாப்பான நீர் வழங்கல் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகத்திட்டம் அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மாவட்ட நீர் வழங்கல் பொறியியலாளர் விளக்கமளித்தார்.
இதனிடையே குடிநீர் வழங்கல் நீரேந்து பிரதேசங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பொலிஸ்,இராணுவ அதிகாரிகள், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள்,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.