தினமும் 10,000 ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பலூசிஸ்தான் முடிவு
தங்கள் மகாணத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளை தினமும் தலா 10,000 போ் வீதம் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் இலக்கு நிா்ணயித்துள்ளது.
இது குறித்து, ஆப்கன் எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த மாகாண அரசின் செய்தித் தொடா்பாளா் ஜன் அசாக்ஸாய் கூறியதாவது:மாகாணத்திலிருந்து தினமும் 10,000 சட்டவிரோத அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். இதற்காக, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் ஆப்கன் நாட்டவா்களைத் தேடிக் கண்டறியுமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் சண்டை காரணமாக அந்த நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு பாகிஸ்தான் பல ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வந்தது.எனினும், எல்லையையொட்டிய பகுதிகளில் தற்போது அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஆப்கன் அகதிகள் அதிகம் பங்கேற்பதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டுகிறது. அதன் தொடா்ச்சியாக, உரிய ஆவணங்களின்றி நாட்டில் தங்கியிருக்கும் அனைத்து அகதிகளும் அக். 31-க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து, சுமாா் 17 லட்சம் ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.கெடு தேதி முடிந்ததும், தங்கள் நாட்டிலிருந்து உரிய ஆவணங்கள் இல்லாத அகதிகளை ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் அரசு திருப்பி அனுப்பி வருகிறது. அதுபோல் இதுவரை 4 லட்சத்துக்கும் மேலானவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
இருந்தாலும், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுவதிலிருந்து தப்புவதற்காக ஏராளமான அகதிகள் தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றுவிடுவதால் அண்மைக் காலமாக இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாகவே, தினமும் 10,000 ஆப்கன் அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற பலூசிஸ்தான் அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.