தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ‘பாரதம்’ பெயரும் இந்துக் கடவுளும்! வலுக்கும் எதிர்ப்புகள்!!
தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படம் மற்றும் பாரதம் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அதன் விதிகளை மாற்றியது. இது தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தடையாக இருந்தது. பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஓராண்டு காலத்திற்கு இந்த புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ஆயுர்வேதத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்குப் பதிலாக ‘பாரதம்’ என மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கெனவே கருப்பு-வெள்ளையில் இருந்ததாகவும் தற்போது நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுபோல ‘பாரதம்’ என்ற சொல் இடம்பெற்றதிலும் பெரிய தவறும் ஒன்றும் இல்லை என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.