வலுக்கும் காலிஸ்தான் விவகாரம்: கனடா அரசாங்கத்திற்கு எதிராக இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோருக்கு, கனடா அரசு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கனடாவில் வசித்து வந்த, காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதனை தொடர்ந்து, அந்த கொலையின் பின்னணியில், இந்தியா இருப்பதாக கனடா குற்றம்சாட்டியிருந்த நிலையில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்தியா ஒத்துழைப்பு
இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க குடியுரிமை பெற்றவரை, அமெரிக்காவில் வைத்தே கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் கொலை குறித்த விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பக்சி, கனடா அரசு தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோருக்கு அடைக்கலம் தருவதாகவும், கனடா தூதர்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.