கைலாசாவுன் ஒப்பந்தம்; பறிபோன அதிகாரியின் பதவி – நித்தியானந்தாவால் சிக்கல்!
கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் செய்ததால் தலைமை அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா
நித்தியானந்தா தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வருகிறார். இவருக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பக்தர்களாக இருந்து வருகின்றனர். நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாக வீடியோ வெளியாகி சர்ச்சை கிளம்பியது.
ஆள்கடத்தல், பணமோசடி உள்பட பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ததோடு நிற்கிறது. இதற்கிடையில் நித்யானந்தா திடீரென மாயமானார். கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். தனிக்கொடி, பாஸ்போர்ட், கரன்சியையும் வெளியிட்டார்.
பதவி பறிப்பு
தொடர்ந்து, தென்அமெரிக்க நாடான பராகுவே நாட்டின் வேளாண் துறை தலைமை அதிகாரியான அர்னால்டோ சாமோரா கைலாசா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில், இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அர்னால்டோ கூறுகையில், “கைலாசா நாட்டை சேர்ந்த 2 பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். எங்கள் நாட்டுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தனர். பல்வேறு திட்டங்களை முன்வைத்தனர். அவர்களை நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.