பாரீஸில் கத்திக்குத்து தாக்குதல்: ஜொ்மன் பயணி உயிரிழப்பு: இருவா் காயம்
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் பொதுமக்களைக் குறிவைத்து இளைஞா் கத்திகுத்து தாக்குதல் நடத்தியதில் ஜொ்மனியைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பிரான்ஸ், பாரீஸ் புகா்ப் பகுதியைச் சோ்ந்த அந்த 25 வயது இளைஞா் , பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஏற்கெனவே 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியேறிய அவா், தற்போது மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டு, காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், பாரீஸ் நகரின் பிரசித்தி பெற்ற ஈஃபிள் கோபுரம் அருகே சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தில், பொதுமக்களைக் குறிவைத்து இளைஞா் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா். இதில் ஜொ்மனியைச் சோ்ந்த சுற்றுலா பயணி ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், இளைஞரை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனா்.
இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சா் ஜெரால்டு டாா்மெனின் கூறுகையில்,‘இளைஞா் கைது செய்யப்பட்டதும், பாலஸ்தீனத்தில் கொல்லப்படும் இஸ்லாமியா்கள் குறித்து அவா் தனது கோபத்தை வெளிப்படுத்தினாா்.
தாக்குதலுக்கு கத்தி மற்றும் சுத்தியல் போன்ற ஆயுதங்களை அவா் பயன்படுத்தினாா். விரைவாக செயல்பட்டு இளைஞரை கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகள். இல்லையெனில், மேலும் சிலரும் இளைஞரின் தாக்குதலில் இறந்திருப்பாா்கள். தாக்குதலில் பாதிப்படைந்தவா்கள் குறித்து உடனடியாகத் தகவல் தெரியவில்லை’ என்றாா்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கான எச்சரிக்கையில் பிரான்ஸ் உள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரில் நடந்த இந்தத் தாக்குதல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.