தமிழரசுக் கட்சிக்கு புதிய தலைவர்! மோதிவரும் ஆதரவாளர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இருவர் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய தலைவர் தெரிவு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் மத்திய செயற்குழு கூடி புதிய தலைவரை முடிவு செய்யும் என்றும், புதிய தலைமைக்கு அதிக வேட்பு மனுக்கள் வந்தால் பொதுக்குழு கூடி புதிய தலைமையை முடிவு செய்யும் என்றும் சமீபத்தில் கூடிய மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபர்த் தேர்தல் வெற்றி
எனினும், இதற்கு முன்னர் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை, என்பதுடன் கட்சியால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் எதிர்வரும் அதிபர்த் தேர்தல் வெற்றிக்கு தமிழ்க் கட்சிகளின் ஆதரவு பிரதான காரணியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், புதிய தலைமைத்துவத்திற்கு முன்மொழியப்பட்ட இருவர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் மோதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.