கட்புலனற்றோருக்கு விசேட வாக்குச் சீட்டுகள் : தேர்தல்கள் ஆணைக்குழு
எதிர்வரும் அனைத்து தேர்தலில் கட்புலனற்றோருக்கான விசேட வாக்குச் சீட்டுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் முன்னோடி திட்டமாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
அங்கவீனமுற்றோருக்கு அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தேவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடிய வசதிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
அங்கவீனமுற்ற சமூகத்தினருக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 600 பேருந்து கொள்வனவு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்காக சில பேருந்து கொள்வனவு செய்து முன்னோடி திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முன்மொழியவுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற மன்ற குழுத் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.