இது ஒரு கடினமான நேரம் – இரண்டே மணி நேரம் தான்…!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!!
கனமழை காரணமாக சென்னை ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை
தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் அநேக இடங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. சாலை, வீடு போன்றவற்றில் மழை நீர் இருப்பதால் மக்கள் செய்வதறியாது முழித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, இன்று முழுவதுமாக சென்னை மாநகரின் இயல்பு நிலை முடங்கியிருக்கின்றது. ரயில், பேருந்து, விமான சேவை என அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்விநியோகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் பலரும் ஸ்தம்பித்துள்ளனர்.
2 மணி நேரம் தான்
இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை காரணமாக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார் என்று தகவல் அளித்து, இது ஒரு கடினமான நேரம் என்றும் மழை என்பது இயற்கையானது என குறிப்பிட்டார்.
மேலும், மழை நின்ற அடுத்த 2 மணி நேரங்களிலேயே மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.