;
Athirady Tamil News

மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு: சகமனிதரின் துயர் துடைத்திட ஓரணியாய் திரள்வோம் என X தளத்தில் பதிவு

0

“அரசோடு கைகோர்த்து திரள கரம்கூப்பி அழைக்கிறேன்” என மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவுமாறு பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

குறைய தொடங்கிய மழை
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வந்தது.

வரலாறு காணாத இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆந்திராவை நோக்கி மிக்ஜாம் புயல் நகரத் தொடங்கி இருப்பதால் மழை பொழிவின் அளவு சென்னையில் குறைய தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் அழைப்பு
இந்நிலையில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைவாக நடத்தி முடிக்க அரசு அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கும் கைகோர்த்து உதவி செய்ய முன்வருமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ்(X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம்.

2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, ‘#CycloneMichaung’ இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.

முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.

இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம்.

இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்!

அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்! என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.