வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மசூதிக்கு வரலாம் – அழைப்பு விடுத்த இஸ்லாமியர்கள்
“அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.
பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அதன்படி, நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பள்ளிவாசலுக்கு வர அழைப்பு விடுத்த இஸ்லாமியர்கள்
நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப அவை அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், நிலையில், “அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பள்ளிவாசலின் ஃபேஸ்புக் பக்கத்தில், “அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மிக்ஜாம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளியில் தண்ணீர் பிடிக்கலாம், மொபைல் மற்றும் ஜார்ஜ் லைட் போன்ற சாதனங்களுக்கு ஜார்ஜ் செய்து கொள்ளலாம். மழை அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் மழைநீர் வந்தவர்கள் பள்ளியில் தங்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “அஸ்ஸலாமு அலைக்கும் மழைநீர் அதிகமாக இருப்பதால் பொது மக்கள் பள்ளியை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு கொடுக்கப்படுகிறது. பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல. நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு ஏற்பாடு நடைபெறுகிறது. (150 கிலோ அரிசி கொண்டு உண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது) பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.