போலி வாகன வருமான அனுமதி பத்திரம் தயாரித்தவர் கைது
5000 ரூபாவிற்கு போலி வாகன வருமான அனுமதிப்பத்திரம் தயாரித்ததாக கைதுசெய்யப்பட்ட தரகர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது நேற்று(4) நீதவான் ஹர்ஷன கெகுணாவெலவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பகுதிக்கு நாளாந்தம் முச்சக்கரவண்டியில் வரும் இவர், அப்பகுதியில் வாகனங்களில் வருபவர்கள்களிடம் விசாரித்து அவர்களுக்கு 5,000 ரூபாய்க்கு போலி வருமான அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறையின் கோரிக்கை
இந்நிலையில், ரத்மலானை விமானப்படைத் தளத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவருக்கு சந்தேகநபர் தொடர்பாக அறியக் கிடைத்த நிலையில், காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
அதன்பின்னர், காவல்துறையினர் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் பின்னர் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்த மூன்று போலி வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மாளிகாவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 14, ஸ்டேட் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவரைக் கைதுசெய்வதற்காக விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக காவல்துறை மோசடிப் புலனாய்வுப் பிரிவினரிடம் இந்தச் சம்பவத்தின் மேலதிக நடவடிக்கைகளை ஒப்படைக்க உத்தரவிடுமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.