;
Athirady Tamil News

கொழும்பில் இயங்கி வந்த போலி கல்வி நிலையம் : பணிப்பாளர் கைது!

0

கொழும்பில் போலியான பட்டப்படிப்புச் பாடநெறிகளை வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கல்வி நிலையத்தை நடத்தி வந்த 24 வயது நிறைந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கல்வி நிலையத்தின் மீது வழங்கப்பட்ட புகார்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த நவம்பர் 27 ஆம் திகதி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இதன் போது கொழும்பு பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள ‘எவல்வ் காலேஜ் ஆஃப் எஜுகேஷன் ’ (Evolve College of Education) இல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

24 வயது நிறைந்த இவர் கிரியல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தேவையான போலி டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்களை வழங்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்தப் பெண், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்களை ஈர்த்து, நிகழ்நிலை வகுப்புகளை நடத்தி, படிப்பு முடிந்தவுடன் போலி டிப்ளோமாக்களை வழங்கியுள்ளார்.

விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உரிய முறைமைகளை பின்பற்றாமல், உள்நாட்டு மற்றும் சர்வதேச கற்கைநெறிகளை வழங்குவதாகக் கூறி மாணவர்களிடமிருந்து 100,000 ரூபாய் முதல் 445,000 ரூபாய் வரை நிதி அறவிடப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நிறுவனத்திற்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிற்கு எதிராகவும் 43 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மாத்திரமன்றி 100 இற்கும் அதிகமானோர் மோசடியில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்வி நிலையத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை கைது செய்ய பம்பலப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.