பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞருக்கு காசாவில் ஏற்பட்ட பரிதாபம்: இஸ்ரேல் சார்பாக சண்டையிட்ட 2வது நபர் உயிரிழப்பு
காசா பகுதியில் நடந்த சண்டையில் பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞர் பெஞ்சமின் நீதம் இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்காக சண்டையிட்ட போது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காசாவில் பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞர்
காசா பகுதியில் நடைபெற்று வரும் போர் தாக்குதலில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை சார்பாக சண்டையிட்ட பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞர் பெஞ்சமின் நீதம் (Binyamin Needham) ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெஞ்சமின் நீதம் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்றும் அவர் தன்னுடைய குடும்பத்துடன் 10 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலில் குடியேறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் அக்டோபரில் 7ம் திகதி தொடங்கிய தாக்குதலில் நாதனெல் யங் என்றவருக்கு பிறகு, இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்காக சண்டை போட்டு கொல்லப்பட்ட 2வது பிரித்தானியர் பெஞ்சமின் நீதம் ஆவார்.
ஜிக்ரோன் யாகோவைச் சேர்ந்த நீதம், 601வது பட்டாலியன் பிரிவில் சண்டையிட்டதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலிய அதிகாரிகள் வழங்கிய தகவலில், கொல்லப்பட்ட பெஞ்சமின் நீதம் காசாவில் 2 நாட்கள் மட்டுமே இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவருக்கு துல்லியமாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட 3 நபர்களில் டீன் ஏஜ் இளைஞர் நீதமும் ஒருவர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.