பிரித்தானியா, ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல்: சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி
ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சல்களில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பார்சலில் இருந்த போதைப்பொருள்
இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பார்சல்களில் போதைப்பொருள் இருப்பதை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான 25 பார்சல்களை அதிகாரிகள் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து சோதனையிட்ட போது அதில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில், 1740 கிராம் குஷ் மருந்து, 2193 Ecstasy என்ற Methamphetamine மாத்திரைகள் மற்றும் 29 கிராம் Amphetamine போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.
ஐரோப்பாவிலிருந்து அனுப்பப்பட்ட பார்சல்
இந்த பார்சல்கள் ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவில் இருந்து இலங்கையின் கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 43 மில்லியன் ரூபாய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்த பிறகு இந்த போதைப்பொருட்கள் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.