ஆந்திரத்தில் கரையைக் கடந்தது மிக்ஜம் புயல்
சென்னை/அமராவதி: தமிழக வட கடலோர மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட மிக்ஜம் புயல், ஆந்திரத்தின் பாபட்லா என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30-2.30 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிர புயலாக கரையைக் கடந்தது.
அப்போது பாபட்லாவை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை கொட்டியது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியது: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மிக்ஜம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியான பாபட்லாவுக்கு தெற்கே கரையைக் கடந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கிய புயல், பிற்பகல் 2.30 மணியளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது. மேலும் இது வடதிசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
மிக்ஜம் புயல் காரணமாக திங்கள்கிழமை (டிச. 5) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 14 இடங்களில் அதிபலத்த மழையும், 29 இடங்களில் மிக பலத்த மழையும், 15 இடங்களில் பலத்த மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பூந்தமல்லியில் 340 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை முதல் திங்கள்கிழமை (டிச. 6-11) வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, சனிக்கிழமை (டிச. 9) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோயம்பத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் புதன்கிழமை (டிச. 6) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.
மழையளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பூந்தமல்லி 340, ஆவடி (திருவள்ளூர்) 280, காட்டுப்பாக்கம் (காஞ்சிபுரம்) 270, நுங்கம்பாக்கம் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 240, மாமல்லபுரம் (செங்கல்பட்டு), ஐஸ்ஹவுஸ் (சென்னை) தலா 220, ராயபுரம், அடையாறு, திரு.வி.க நகர், கோடம்பாக்கம் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) தலா 210, சோழிங்கநல்லூர், தரமணி, மீனம்பாக்கம் (சென்னை), சென்னை விமான நிலையம், குன்றத்தூர்(காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம்), திருவூர் (திருவள்ளூர்) தலா 190.
ஆந்திரத்தில் பெரும் பாதிப்பு: “மிக்ஜம்’ புயல் தாக்கத்தால் ஆந்திரத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்தது; பல இடங்களில் சாலைகள் அரித்துச் செல்லப்பட்டன; ஏரிகளும் குளங்களும் நிரம்பி வழிந்தன; ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
இதனிடையே, புயல் பாதிப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புயலின் தாக்கம் மற்றும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அவர் ஆய்வு நடத்தினார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடைபட்ட மின்சார விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், உயிரிழப்புகள் அல்லது கால்நடைகள் இறந்தது தொடர்பாக தெரிய வந்தால் உரிய இழப்பீட்டை வழங்குமாறும் அவர் உத்தரவிட்டார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு ரேஷனில் போதிய உணவு தானியங்களை விநியோகம் செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார். உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ. 22 கோடியை ஆந்திர முதல்வர் ஒதுக்கீடு செய்தார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பாபட்லா, குண்டூர், கிருஷ்ணா, என்.டி.ஆர்., சித்தூர், கடப்பா, விசாகப்பட்டினம், திருப்பதி உள்ளிட்ட மாவட்டங்களில் உதவி தொலைபேசி எண்களை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.