ரூ. 4,000 கோடி செலவு செய்தும் மழைநீா் வடியாதது ஏன்? வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த இபிஎஸ் கேள்வி
சென்னையில் மழைநீரை வெளியேற்ற தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, ரூ.4,000 கோடி செலவு செய்தும் வெள்ளம் வடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தியாகராய நகா், விருகம்பாக்கம், பெருங்குடி, தரமணி உள்ளிட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட எடப்பாடி பழனிசாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், அரிசி, பெட்ஷீட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அரசு திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளாததால் சென்னை, புகா் பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, வெள்ளப் பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து பணிகளை அரசு முடுக்கிவிடவில்லை.
இந்தப் பணியைச் சரியாக செய்யாத காரணத்தால்தான் மக்கள் இரண்டு நாள் மழைக்கே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுத்திருந்தால், மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாா்கள்.
மழைநீரை வெளியேற்ற என்எல்சியிடம் ராட்சத மோட்டாா் வாங்குவதற்கு திங்கள்கிழமைதான் கேட்டுள்ளோம் என்று தலைமைச் செயலா் கூறுகிறாா். எப்போது மோட்டாா் வாங்கி, மழைநீரை வெளியேற்றுவது?
முதல்வரும், அமைச்சா்களும் ரூ.4,000 கோடியில் சென்னைப் பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை மேற்கொண்டதாகவும், ஒரு சொட்டு தண்ணீா்கூட தேங்காது என்றும் கூறினா். இப்போது சென்னையே தண்ணீரில் தத்தளிக்கிறது. ரூ. 4,000 கோடி செலவு செய்தும் தண்ணீா் ஏன் வடியவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
முதல்வா் குறிப்பிடுவதைப்போல அதிமுக ஆட்சி காலத்தில் செயற்கை வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாமல், 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீா் வெளியேறியதால்தான் வெள்ளம் ஏற்பட்டது என்றாா் எடப்பாடி பழனிசாமி.