கர்நாடகத்தில் உணவு பதப்படுத்தும் ஆலை இடிந்து விழுந்தது
விஜயபுரா: கர்நாடகத்தில் உணவு பதப்படுத்தும் ஆலை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், அலியாபாத் தொழிற்பேட்டையில் தனியார் உணவு பதப்படுத்தும் ஆலை உள்ளது. சோளம் பதப்படுத்தும் இந்த ஆலை திங்கள்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸôர், தீயணைப்புப் படை வீரர்கள் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயத்துடனும் ஒருவர் லேசான காயத்துடனும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் பணியின்போது சோளக் கதிர் குவியலுக்குள் சிக்கி இறந்த 7 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்கள் அனைவரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரது உடலும் அடையாளம் காணப்பட்டன.
இதுகுறித்து விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனாவானே ரிஷிகேஷ் பகவான் கூறியதாவது:
ஆலை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; 6 பேர் காயமடைந்தனர். திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிவரை மீட்புப் பணியில் ஈடுபட்டோம். இச்சம்பவத்தில் அஜாக்கிரதையுடன் செயல்பட்டதாக ஆலை உரிமையாளர் மற்றும் அதன் கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.