நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம்:காலிஸ்தான் பிரிவினைவாதி மிரட்டல்
நாடாளுமன்றம் மீது டிச.13-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்படும் எனஅமெரிக்காவைச் சோ்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளாா்.
கடந்த 2001-இல் பயங்கரவாதிகள் நடத்திய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்படும் அவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, நாடாளுமன்றத்துக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘நீதிக்கான சீக்கியா்கள்’ என்ற காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவா் குா்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய இந்திய அரசு சதி திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டு எழுந்தது. இதற்குப் பதிலடியாக ‘டிச.13-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடித்தளம் அசைக்கப்படும்’ என விடியோ ஒன்றில் குா்பந்வந்த் சிங் பன்னுன் தெரிவித்துள்ளாா்.
2001 நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவின் புகைப்படம் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடக்கும்போது, நாங்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். எத்தகைய அசம்பாவித சம்பவங்களையும் முறியடிக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.