2 நாள் பசியால் உயிரிழந்த யாசகர்; ஆனால் பாக்கெட்டில் லட்ச ரூபாய் பணம் – என்ன நடந்தது?
பாக்கெட்டில் ரூ.1.14 லட்சம் பணம் இருந்தும் யாசகர் ஒருவர் பசியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாசகர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் வல்சாட் என்ற இடத்தில் யாசகர் ஒருவர் 2 நாட்களாக நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தார். இதைப்பார்த்த கடைக்காரர் ஒருவர் 108-க்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் அந்த யாசகரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர் பசியால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர் கிருஷ்ணா படேல் கூறுகையில் “நோயாளி பல நாள்கள் சாப்பிடாமல் இருந்திருப்பார்போல் தெரிகிறது.
பாக்கெட்டில் பணம்
இறந்துபோன யாசகர் அணிந்திருந்த சட்டை மற்றும் ஸ்வட்டர் பாக்கெட்களில் சிறிய சிறிய பிளாஸ்டிக் பேக்குகளில் மொத்தம் 1.14 லட்சம் பணத்தை அடைத்து வைத்திருந்தார். அவை 500, 200, 100, 20, 10 ரூபாய் நோட்டுகளாக இருந்தன” என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து யாசகர் சம்பாதித்தும், சாப்பிடப் பயன்படுத்தாமல் வைத்திருந்த பணத்தை மருத்துவர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இறந்துபோன யாசகர் பெயர் அல்லது உறவினர் யாராவது அடையாளம் காணப்பட்டால், இந்தப் பணம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த யாசகரின் புகைப்படத்தை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.